குலதெய்வம்.


கடவுள் ஒன்று.
இறை நான்கு.
தெய்வங்கள் பல.

தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள் அது இறை என்றும் பேசப்படுகிறது. 

ஆற்றல் மூலமான இந்த, கடவுளும், இறையுமே இயற்கையின் அனைத்து உருவாக்கங்களிலும் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். 

கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு.

கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல. ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும். 

தெய்வங்கள் மூன்று வகைப்படும்.
1. கடவுள்கூறு தெய்வம்
2. இறைக்கூறு தெய்வம்
3. குலதெய்வம்

கடவுள்- வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடைய ஒற்றைத் திரம் ஆகும். இறை- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள்.

நம்மால் உருவான தமிழ் (மொழி), முதலாவது கடவுள் கூறு ஆகும்.

குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- நமது, மகளாகவோ, மகனாகவோ தமிழ்முன்னோர் நிறுவியதை உய்த்துணர முடியும்.

ஆக கடவுள் நம்மை படைத்தான ஒன்று அல்ல. கடவுள் வெளி, விண்வெளி, விசும்பு என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. நம்பிக்கைக்கு உரியதல்ல கடவுள். அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கானது கடவுள். கடவுள் எல்லை இல்லாதது. கடவுள் தான்தோன்றி இயக்கம் உடையது அல்ல. கடவுள் நம்மிலிருந்து இயக்கம் பெற்று நம்மை முயக்குகிறது. 

எனவேதான் கடவுளை- நமக்கு உள்ளும் வெளியிலும் அமைந்து- நம்மை தக்கவரா தகவிலரா என்று அடையாளம் காட்ட வல்ல- நமது எச்சமான பிள்ளைக்கு அடையாளமாக்கி- சோயோன் என்றனர் குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை தமிழ்முன்னோர்.  

நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறை ஆற்றல்கள்தாம் நம்முள் இருக்கின்றன. அவைகளை தாயென்றோ தந்தையென்றோ அடையாளப் படுத்துவது பொருந்தும். 

ஐந்தாவது ஆற்றலான விசும்பு பொருள் அல்ல. அது கட்டளைகள் மட்டுமே. அது அறிவு மட்டுமே. நான்மறைகளும் தரும் இயக்கம் பெற்று அவைகளை இயக்கும் பேரறிவு ஆகும் விசும்பு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். விசும்பு தாய்மொழி ஆகும். விசும்பு தமிழர்களுக்கு தமிழ் என்கிற மென்பொருள் ஆகும். தமிழ் உண்மையில் நமது சேய் ஆகும்.

நமது மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களால் பட்டறியப்படுகிற அறிவின் சேமிப்பகமாகவும், அந்த புலன்களின் அறிவால் பதிவு பெற்ற வகைக்கு அவற்றை முயக்கும் நம் ஆறாவது புலன் ஆன மனம் இரண்டாவது கடவுள் கூறு ஆகும்.

நம்மிலிருந்து தான்தோன்றி கூட்டியக்கமாக உருவான நம் பிள்ளைகள், மூன்றாவது கடவுள் கூறு ஆகும்.

நம்மால் உருவாக்கப்பட்ட பல்வேறு கருவிகள், நாம் கொண்டாடத்தக்க நான்காவது கடவுள் கூறு என்கின்றனர் தமிழ்முன்னோர். 

நிலம் நீர் தீ காற்று என்கிற நான்மறைகளும், நம் பெற்றோர் உள்ளிட்ட முன்னோர்களும் நாம் கொண்டாடத்தக்க இறைக் கூறு என்கின்றனர் தமிழ்முன்னோர்.

காடும் காடு சார்ந்த இடமுமான முல்லைத்திணையின் இறைக்கூறு தெய்வம் மாயோன், நிலம் என்கிற ஆற்றல் மூலத்திற்கானது ஆகும்.

நீரும் நீர் சார்ந்த இடமுமான மருதத்திணையின் இறைக்கூறு தெய்வம் மன்னன், நீர் என்கிற ஆற்றல் மூலத்திற்கானது ஆகும்.

குறிஞ்சியும், முல்லையும் திரிந்த, வறட்சி நிலமான பாலைத்திணையின் இறைக்கூறு தெய்வம் கொற்றவை, தீ என்கிற ஆற்றல் மூலத்திற்கானது ஆகும்.

கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல்திணையின் இறைக்கூறு தெய்வம் வருணன், காற்று என்கிற ஆற்றல் மூலத்திற்கானது ஆகும்.

கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள். தெய்வங்கள் வழிபாட்டு மூலங்கள். வழிபடும் தெய்வங்கள் அனைத்தும் கடவுள் கூறோ, இறைக் கூறோ அன்றி கடவுளோ, இறையோ ஆக மாட்டா. 


நம் பெற்றோர் உள்ளிட்ட நம் முன்னோர்கள், நாம் கொண்டாடத்தக்க குலதெய்வங்கள் ஆகும். 

நடப்பில் கோயில் கட்டி நாம் கொண்டாடி வருகிற குலதெய்வம், நம் முன்னோரில் யாரோ ஒருவருடைய பெற்றோர் ஆகும். பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் என்று ஏழேழு தலைமுறை முன்னோரும் நம் குலதெய்வங்களே. மற்ற உறவுமுறை முன்னோர்களோ, மற்றவர்களின் குலதெய்வங்களோ நமக்கான குலதெய்வம் ஆகாது.

குலதெய்வம் என்பது, காலம் ஆகிய தனிஒன்றுகள் இருந்த இடத்தில் சென்று அமைகிற, கூட்டியக்கச் சுழியம் என்கிற வெற்றிகளின் தரவு ஆகும். 

குலதெய்வங்களுக்கு முன்னெடுக்கும் உங்கள் கொண்டாட்டம், கடவுளில் இயக்கமாகப் பதிவாகி, உங்கள் குலதெய்வங்களின் வெற்றித்தரவுகள், உங்கள் முன்னேற்றத்திற்கு பயனாகும் வகைக்கு கடவுளால் முயக்கப்படும்.


'சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று! இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதாகும்' என்கிற கட்டுரை மூலமும், குலதெய்வம் என்பது என்ன? அதை வழிபடுவது நமக்கு எப்படிப் பயனாகிறது என்பதைத் தெளிவாகவும், விரிவாகவும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் குலதெய்வங்களை, நீங்களும் இந்த வலைப்பூவில் பதிவிட்டு, உங்கள் வாழ்க்கை சிறப்பாகும் வகைக்கு, கடவுளின் பேரளவான முயக்கத்தை பெற முடியும், வாழ்த்துக்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்னம்மாள்.